பெரிய திரையில் பார்த்து ரசித்த மாணவ, மாணவிகள்


பெரிய திரையில் பார்த்து ரசித்த மாணவ, மாணவிகள்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சந்திராயன்-3 விண்கலம் நிலவில் இறங்கும் காட்சியைபெரிய திரையில் மாணவ, மாணவிகள் பார்த்து ரசித்தனர்.

ராமநாதபுரம்

சந்திராயன்-3 விண்கலம் நேற்று நிலவின் தென் துருவத்தில் இறங்கியது. இந்த நிகழ்வை நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் டி.வி.யிலும் செல்போன் மூலமாகவும் கண்டு களித்தனர். ராமநாதபுரம் வள்ளல் பாரி அரசு நடுநிலைப் பள்ளியில் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வானது ஆஸ்ட்ரோ கிளப் மூலம் காண்பிக்கப்பட்டது. அதற்காக பள்ளியில் அகன்ற திரை வைக்கப்பட்டு இஸ்ரோ வெப்சைட் மூலம் நேற்று மாலை 5 மணியிலிருந்து இந்த நிகழ்வானது ஒளிபரப்பப்பட்டது. அப்போது பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் அகன்ற திரையில் சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கும் நிகழ்வை கண்டுகளித்தனர்.

மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலமாக வானில் தெளிவாக தெரிந்த நிலாவையும் மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் ராமநாதன், மல்லிகா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொக்கநாதன் செய்திருந்தார். இதேபோல் ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் நேற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திராயன்-3 விண்கலம் நிலவில் இறங்கும் காட்சியை டி.வி.களில் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.


Next Story