அரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவர்கள் குறைவான தேர்ச்சி


அரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவர்கள் குறைவான தேர்ச்சி
x

அரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய 346 மாணவர்களில், 265 மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை, நாடு முழுவதும் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நீட் தேர்வு எழுதியவர்களில் உத்தர பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில், 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் கடந்த 2020-ம் ஆண்டு 57.44% ஆகவும், 2021-ம் ஆண்டு 54.4% ஆகவும் இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 51.3% ஆக சரிந்துள்ளது.

அதே சமயம் சென்னையில் அரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய 346 மாணவர்களில், 265 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். வெறும் 81 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். இவர்களில் 5 பேர் பூஜ்யத்திற்கும் குறைவாக எதிர்மறை மதிப்பெண்களையும், 2 பேர் பூஜ்ய மதிப்பெண்ணையும், 6 பேர் ஒற்றை இலக்க மதிப்பெண்ணையும் பெற்றுள்ளனர்.


Next Story