அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்


அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்
x

அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

திருச்சி

துறையூர்:

துறையூரில் இருந்து வேங்கடத்தானூர் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் இருந்து துறையூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருவதற்காக மாணவ, மாணவிகள் தினமும் அரசு பஸ்சில் பயணம் செய்கின்றனர். நேற்று மாலை வழக்கம்போல் துறையூரில் இருந்து அந்த கிராமத்திற்கு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சின் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்தனர்.

தினமும் இதுபோன்று மாணவர்கள் பயணிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பஸ்சின் உள்ளே செல்லாமல் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறும், பஸ்சின் பின்புறம் தொங்கியவாறும் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். பஸ்சிற்குள் இருக்கைகளில் இடமிருந்தும் அமராமல், கம்பியைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது பஸ்சிற்கு அருகே இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் மீது மாணவர்கள் உரசும் நிலையில், வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார் உடனடியாக இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களை கண்டிக்க வேண்டும். படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வது மட்டுமின்றி, கம்பிகளை பிடித்துக்கொண்டு சக்கரத்தில் ஒரு காலை வைத்து தாண்டுகிறார்கள். இதனால் சக்கரம் சுழலும்போது சக்கரத்தின் அடியில் மாணவர்கள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story