போதையால் பாதை மாறும் மாணவர்கள்


போதையால் பாதை மாறும் மாணவர்கள்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:30 AM IST (Updated: 8 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

திண்டுக்கல்

குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன.

இப்போது அது ஒரு கவுரவமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

விதிகளால் என்ன பயன்?

கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

போதைப்பொருட்கள்

'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு

இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

பள்ளி தலைமை ஆசிரியை ஜெய்சிபெல் ஷாலோம்:- பள்ளி மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். ஆனால் இன்றைய மாணவர்களில் பலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாக இருக்கின்றனர். 'கூல் லிப்' எனும் குட்கா தாராளமாக விற்கப்படுகிறது. மாணவர்கள் முதலில் அதை தான் பயன்படுத்துகின்றனர். அதுவே நாளடைவில் பிற போதை வஸ்துகளுக்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால் மாணவர்களின் கற்றல், பாடத்தை கவனிக்கும் திறன்கள் குறைந்து கல்வி பாதிக்கப்படுகிறது. அதுபோன்ற மாணவர்களை தொடக்கத்தில் கண்டறிந்தால் எளிதாக திருத்திவிடலாம். இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை மிரட்டியோ, அடித்தோ திருத்த முடியாது. அன்பாக பேசி, போதை வஸ்துகளால் ஏற்படும் பாதிப்பை விளக்கி திருத்த வேண்டும். அதேபோல் பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளை கண்காணித்து, தவறான பழக்கம் இருந்தால் திருத்த வேண்டும். அதேநேரம் மாணவர்களை பாழாக்கும் கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் 75 சதவீத மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுக்கலாம்.

மது பழக்கம்

தேசிய ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் விஜய்:- நான் பல மாணவர்களை கவுன்சிலிங் மூலம் திருத்தி இருக்கிறேன். இன்றைய காலக்கட்டத்தில் பல பெற்றோர் குழந்தைகளை சரிவர கவனிப்பது இல்லை. இதனால் மாணவர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடுகின்றனர். மாணவ பருவத்திலேயே குட்கா, மது பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். எனவே பெற்றோர் தங்களுடைய குழந்தைகளிடம் மனம்விட்டு பேசி, தவறான பாதைக்கு செல்வது தெரிந்தால் திருத்த வேண்டும்.

அதேபோல் ஆசிரியர்கள் 2-வது பெற்றோர் ஆவர். எனவே பாடம் சார்ந்து இல்லாமல் நீதி நெறி சார்ந்த போதனைகளை கூறவேண்டும். மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து அந்த பாதையில் திருப்பி விடவேண்டும். அதன்மூலம் மாணவர்கள் தவறான பாதையில் இருந்து நல்வழியில் திரும்புவார்கள். கபடி, கோ-கோ, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவர்களை ஈடுபட செய்து, உடல் உறுதியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். போதை வஸ்துகளால் உடல்நலம் கெடுவதை உணர்த்தி திருத்த வேண்டும்.

கொசவபட்டியை சேர்ந்த கிரேஸ்மேரி:- குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் கடைகளில் விற்பனை நடக்கிறது. அதை மாணவர்களுக்கும் விற்பனை செய்கின்றனர். இதனால் மாணவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் வாங்கி பயன்படுத்துகின்றனர். பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டம் எனும் பெயரில் மது குடிக்கும் பழக்கமும் வந்துவிடுகிறது. எதிர்கால இளைய சமுதாயம் உடல், மன அளவில் வலிமை இல்லாமல் போய்விடும். எனவே மாணவர்கள், இளைஞர்களை பாழாக்கும் கஞ்சா, குட்கா, மதுவை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story