போதையால் பாதை மாறும் மாணவர்கள் நல்வழிப்படுத்துவது எப்படி?
போதையால் பாதை மாறும் மாணவர்கள் நல்வழிப்படுத்துவது எப்படி? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன.
இப்போது அது ஒரு கவுரவமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.
விதிகளால் என்ன பயன்?
கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.
விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.
புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுபாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.
முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.
இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.
இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிவுநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
போதைப்பொருட்கள்
'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.
சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.
போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
முதல் பொறுப்பு பெற்றோர்கள்
இதுகுறித்து விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சந்திரபாபு:-
இந்த நவீன காலத்தில் இளைய சமுதாயத்தை சீர்குலைப்பவை போதைப்பொருட்கள். மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் பழக்கம் அதிகரிப்பதை நம்மால் அறிய முடிகிறது.
போதை மாணவர்களின் செயல் நம் எதிர்கால சந்ததியை சீர்குலைத்து விடுமே என்ற அச்சம் எழுந்துள்ளது. போதை மாணவர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் செய்தபின் அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள், இதுபோன்ற போதை மாணவர்களிடம் படாதபாடு படுகிறார்கள், மாணவர்களை கண்டிக்க முடியவில்லை. காரணம் எதிர்வினை வேறு விதமாக உள்ளது.
அறிவுரைகளையும் ஏற்க மாட்டார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டமங்கலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர், போதை மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே.
எனவே மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய முதல் பொறுப்பு பெற்றோர்களிடம் உள்ளது. ஏனெனில் அதிக நேரம் அவர்களுடன் உள்ளனர். 2-வது, பள்ளியும், ஆசிரியர்களும், 3-வது, கடுமையான சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் இருக்கிறது. எனவே, பல நல்லதொரு மக்கள் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் போதை எண்ணத்தை மாற்றலாம்.
மாணவர்களின் எதிர்கால நலன்
செஞ்சி அருகே சத்தியமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா:-
பள்ளி மாணவர்கள் சிறிய வயதிலேயே புகை பிடிப்பது, கஞ்சா, குடிப்பழக்கங்கள் என சீரழிந்து வருகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள்தான். முக்கியமாக நகரப்பகுதியில் இருக்கும் மாணவர்களும் அதிக போதைப்பழக் கத்திற்கு ஆளாகின்றனர். பள்ளி அருகில் உள்ள கடைகளில் அனைத்துவிதமான போதைப்பொருட்களும் கிடைக்கின்றது.
ஆனால் இது சம்பந்தமாக நம் மாவட்டத்தில் எந்தவொரு அதிகாரிகளோ அல்லது உணவு பாதுகாப்பு துறையோ இதுவரை பள்ளி அருகில் உள்ள கடைகளை ஆய்வு செய்ததே கிடையாது.
இனியாவது மாணவர்களின் எதிர்கால நலனை காக்க போலீசாரும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு அருகே உள்ள கடைகள், பஸ் நிலையங்கள் போன்ற முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்து போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே மாணவ சமுதாயம் நல்வழிப்படுத்தப்படும்.
திண்டிவனம் வக்கீல் கிருபாகரன்:-
போதைக்கு இளைஞர்கள் அடிமையாவதால் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும். இதனால் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களால் அவருடைய குடும்பம் அவரைச் சேர்ந்த உறவினர்கள் மத்தியில் அவமரியாதை ஏற்படும். அவர்களை சார்ந்த சமூகமும் பாதிப்புக்குள்ளாகும். இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடல்நலம் சீர்கேடு ஏற்படுவதோடு தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும். இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்குண்டான நடவடிக்கைகளை மறுவாழ்வு முகாம் மூலமாகவும் அரசு மற்றும் தன்னார்வல நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்.
உரிய பாதுகாப்பு இல்லை
கள்ளக்குறிச்சி அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் அருள்:-
அரசு, பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து மாணவர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் ஒரு சில மாணவர்கள் பள்ளிகளில் சிகரெட், ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். அந்த மாணவர்களை கண்டுபிடித்து தகுந்த அறிவுரை வழங்கி கண்டித்து வருகிறோம். அதன் பின்னர் அந்த மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்துவதில்லை. மாணவர்கள் தவறான வழியில் செல்ல காரணம் வெளியில் உள்ள பழக்க வழக்கங்கள், நண்பர்கள் மூலம் தான். எனவே பெற்றோர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். சில பள்ளிகளில் கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்கும்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடிப்பதற்காக மாணவர்களை கண்டிக்க முடியாமல் அரசு ஆசிரியர்களை கட்டிப்போட்டுள்ளது. இதனால் சில மாணவர்கள் தங்களை யாரும் கண்டிக்க முடியாது என்ற எண்ணத்தில் துணிந்து தவறான வழிக்கு செல்கின்றனர்.
பெற்றோர் கண்காணிப்பு இல்லை
கள்ளக்குறிச்சி மாணவரின் தந்தை அருண்:-
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள் மற்றும் அவர்களின் பழக்க வழக்கம் பற்றி கண்காணிப்பு இல்லாததால் தான் சில மாணவர்கள் தவறான போதை பழக்கத்திற்கு செல்கின்றனர். அடியாத பிள்ளை திருந்தாது என்பது பழமொழி. அதேபோல் அந்த காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து படிக்க வைப்பதுடன் ஒழுக்கத்தை கற்றுத் தருவார்கள். ஆனால் தற்போது மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது என அரசு கூறியுள்ளது. இதனை மீறி மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்கள் மீது அரசு துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெற்றோர்கள் ஒத்துழைப்பு
தியாகதுருகம் அருகே வரஞ்சரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்திபன்,
ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் பள்ளி பருவத்தில் ஒரு சில மாணவர்கள் சிகரெட், மது உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி கஞ்சா விற்பனை செய்கின்றனர். அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் கலந்து கொள்வதில்லை. அவ்வாறு பெற்றோர்கள் கலந்து கொண்டால்தான் மாணவனின் கல்வித்தரம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். எனவே அனைத்து பெற்றோர்களும் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டங்களில் கலந்து கொண்டு மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வி குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிய வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் அனைவரும் ஆசிரியர்களுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.
மதுபானம் எப்படிக் கிடைக்கிறது?
தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன்:-
இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதைபோன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவர்களுக்கு மதுபாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். மாணவர்கள் நல்லப் பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.