அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல் அரசு பள்ளிகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு, ஆசிரியர்கள் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டார்.
பின்னர் மாணவ, மாணவிகளிடம் நேரடியாக பேசிய கலெக்டர், என்ன படிக்கின்றீர்கள், எதிர்காலத்தில் என்னவாக உருவாக நினைக்கிறீர்கள் என்று கேட்டு, அதற்கு ஏற்றாற்போல் தொடர்ந்து படித்து தங்களது முழு ஈடுபாட்டையும், உழைப்பையும் படிப்பில் செலுத்த வேண்டும். அப்போதுதான் உங்கள் கனவை நிறைவேறும் இலக்கை அடைய இயலும். கல்விக்கு பெற்றோரின் பொருளாதார நிலை ஒரு தடையல்ல. ஆகவே மாணவ, மாணவிகள் தங்களது ஒரே குறிக்கோள் படிப்பு மட்டுமே என்று மிகுந்த கவனத்துடன் படித்து தங்களது இலக்கை அடைய வேண்டும் என்றார்.
சாப்பாட்டை ருசி பார்த்தார்
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் லாரி தொழில், நெசவு தொழில் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை, எளியவர்களின் பிள்ளைகள் அதிகம் அரசு பள்ளிகளில் மட்டுமே படிக்கும் நிலையில், தங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளின் வருகையை உறுதி செய்வதுடன், அவர்கள் நன்கு படித்து உயர்ந்த நிலையை அடைய வைப்பது தங்களது கடமை என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடம், அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை சாப்பிட்டு ருசிபார்த்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின் போது வடக்கு அரசினர் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.