தேசிய தர நிர்ணய குழு அதிகாரிகள் ஆய்வு
சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசியத் தர நிர்ணய குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசியத் தர நிர்ணய குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து தேசிய தர காப்பீடு சான்றிதழ் வழங்குவதற்காக ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அதன் செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளின் வருகை, சிகிச்சை முறை போன்றவைகள் ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள எம்.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்கான தகுதி ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது.
அப்போது தேசிய தர நிர்ணய குழு அதிகாரிகள், டாக்டர் சசிகலா மற்றும் கீர்த்திமான் மகந்தா தலைமையிலான குழுவினர், எம்.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட துணை இயக்குனர் மருத்துவர் விஜய் சந்திரன், பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, மருத்துவ அலுவலர் பிரேம், டாக்டர்கள் உடனிருந்தனர்.
1,000 சுகப்பிரசவம்
எம்.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய வடிவில் அனைத்து வசதிகளுடன் தனியார் மருத்துவமனைக்கு நிகராக இயற்கையான சூழல் வடிவில் சுகாதாரம் மற்றும் 24 மணி நேர இலவச பிரசவ சேவைக்காகவும் குறிப்பாக இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட சுகப்பிரசவம் நடைபெற்று சிறந்த மருத்துவ சேவைகள் புரிந்து சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் செயல்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக தேசிய தர சான்றிதழ் ஆய்வுக்காக மத்திய குழு ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்.சூரக்குடி கிராமத்தை சேர்ந்த சிங்கப்பூர் மற்றும் வெளியூர்வாழ் நண்பர்கள், வெளியூர்வாழ் யாதவ சமுதாயம், இளைஞர்கள் ஒன்றிணைந்து எம்.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பொலிவு பெற தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.