இருவழி சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
சேந்தமங்கலம் அருகே இருவழி சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காந்திபுரம் பிரிவு சாலையில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு மற்றொரு பிரதான சாலை செல்கிறது. அந்த சாலையின் வழியே கொல்லிமலையை சுற்றி பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகள், மலைவாழ் மக்கள், பொதுமக்கள் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. அதை தவிர்க்க தற்போது அடிவாரத்திற்கு செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கும் அந்த சாலையில் ராமநாதபுரம் புதூரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்மண பள்ளம் கிராமம் வரை கடந்த மாதம் இருவழி சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ரூ.2 கோடியே 90 லட்சம் செலவில் அந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அப்பகுதியில் 6 பாலங்கள், தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளை நேற்று முன்தினம் நாமக்கல் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், சேந்தமங்கலம் உதவி பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கு பணியின் முன்னேற்றம் குறித்து ஒப்பந்ததாரர் வீரப்பன் விவரங்களை தெரிவித்தார்.