தூத்துக்குடியில் ரூ.12 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு
தூத்துக்குடியில் ரூ.12 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் ரூ.12 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால்
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும், வீடுகளை மழை வெள்ளம் சூழ்வதை தடுக்கவும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சங்கரப்பேரி முதல் எட்டயபுரம் ரோடு புதூர் பாண்டியாபுரம் பகுதியில் உள்ள பெரிய பள்ளம் ஓடை வரை மழைநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆய்வு
இந்த மழைநீர் வடிகால் அமைய உள்ள இடங்களை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.83 கோடி மதிப்பீட்டில் ரகுமத்நகர், மச்சாது நகர், முத்தம்மாள் காலனி, அய்யாசாமி காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ்ரூ.19 கோடியே 50 லட்சம் மதிப்பில் பிரையண்ட் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் (பணிகள்) ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் (பணிகள்) சரவணன், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.