கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு
கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டு நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கு கனரக வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-கல்லங்குறிச்சி சாலை, அரியலூர்-செந்துறை சாலை ஆகிய சாலைகளில் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் எடுத்து செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைப்பதற்காக, சிமெண்டு காரிடர் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரியலூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து 3 சாலைகளை இணைக்கும் விதமாக அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் இருந்து கயர்லாபாத், கல்லங்குறிச்சி, அமீனாபாத், அரியலூர் வடக்கு வழியாக சிமெண்டு நிறுவனங்களில் இருந்து செல்லும் கனரக வாகனங்களுக்கு தனி மாற்று பாதை அமைப்பது தொடர்பாக கலெக்டர் ரமணசரஸ்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதையில் முக்கிய சாலைகளின் இணைப்புகளில் ரவுண்டானா அமைப்பது குறித்தும், தேவையான இடங்களில் இடம் கையகப்படுத்துவது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.