சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
தியாகதுருகம் அருகே நடந்த சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 59). தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக பானையங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். தியாகதுருகம் வி.புதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது அங்கு சாலையில் நெல் குவித்து தார்ப்பாயால் மூடப்பட்டு அதன் அருகே கல் வைக்கப்பட்டிருந்தது. அந்த கல் மீது மணியின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணியின் மனைவி வசந்தி தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உள்ளிட்ட போலீசார் இறந்த மணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.