புகார் அளித்ததால் வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரின் மகன்கள் கைது


புகார் அளித்ததால் வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரின் மகன்கள் கைது
x

தங்கள் மீது போலீசில் புகார் அளித்த ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரின் மகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

சப்-இன்ஸ்பெக்டர்

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள ரமேஷ் வசித்து வருகிறார். ரமேஷ், அவருடைய மனைவி கவிதா, மகன்கள் ஆகாஷ் (28), சதீஷ் (25) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக தமிழரசன் வீட்டின் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷின் மனைவி கவிதா, தமிழரசன் மற்றும் அவரது தந்தையிடம் வீட்டின் இடம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

போலீசில் புகார்

இது தொடர்பாக தமிழரசன், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி கவிதாவை எச்சரித்து சென்றனர். இந்தநிலையில் ரமேஷின் மகன்களான சதீஷ், ஆகாஷ் ஆகியோர் தமிழரசன் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த அவரது இருசக்கர வாகனத்தில் எச்சில் துப்பி அசுத்தப்படுத்தினர். இதுகுறித்து தமிழரசன் கொடுத்த புகாரின்பேரில் கவிதாவை தாம்பரம் போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு வராமல் அவரது கணவரை போலீஸ் நிலையம் அனுப்பிவைத்தார்.

மகன்கள் கைது

கவிதா விசாரணைக்கு வராததால் நேற்று காலை தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட இருந்தபோது கவிதாவின் மகன்களான ஆகாஷ், சதீஷ் ஆகியோர் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ரோட்டில் வைத்து தங்கள் மீது புகார் கொடுத்த தமிழரசன் மற்றும் அவரது தாயார் உள்பட குடும்பத்தினரை பயங்கரமாக தாக்கினர். இதில் தமிழரசனின் தாத்தா தேவராஜுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டர் சார்லசையும் அவர்கள் பிடித்து கீழே தள்ளினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாம்பரம் போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ், சதீஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story