8 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு
விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு 8 மையங்களில் நடைபெறுகிறது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு 8 மையங்களில் நடைபெறுகிறது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
எழுத்துத்தேர்வு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும்ஆயுதப்படை) பதவிக்கு 444 நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு இந்த பதவிக்காக விண்ணப்பித்துள்ள பொது விண்ணப்பதாரர்கள் 7 ஆயிரத்து 925 பேருக்கான பிரதான எழுத்து தேர்வு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பொது மற்றும் போலீஸ் துறையில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் 8 ஆயிரத்து 494 பேருக்கான தமிழ் மொழித் தகுதி தேர்வு அன்றைய தினம் மாலை 3 மணி முதல் மாலை 5.10 மணி வரை நடைபெறுகிறது.
8 மையங்கள்
இத்தேர்வு 8 மையங்களில் நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் ஸ்ரீவித்யா என்ஜினீயரிங் கல்லூரி, வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரி, சேது என்ஜினீயரிங் கல்லூரி, செவல்பட்டி பி.எஸ்.ஆர். கல்வி குழுமம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம்.
மேலும் போலீஸ் துறையில் பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு 26-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த எழுத்து தேர்வில் 674 பேர் கலந்து கொள்ள உள்ளனர். எழுத்துத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட சீட்டினை வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின்னர் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்து இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
அடையாள அட்டை
தேர்வுக்கூட சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலும் அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலும் விண்ணப்பதாரர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வரவேண்டும். விண்ணப்பதாரர் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வுக் கூடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கூடச்சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரர் பட்டை தீட்டிய நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் மற்றும் ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.