சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு


தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணியசாமி கோவில்

தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தஞ்சை மாநகரில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றாக சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்றால் திருச்செந்தூரை போல முருகனின் அருள் இங்கும் குறையாமல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ராஜகோபுரத்தை கொண்டு இந்த கோவில் உயர்ந்த தளத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா கடந்த மாதம் 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. 1-ந் தேதி காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்றுமுன்தினம் காலை 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

குடமுழுக்கு

நேற்றுகாலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் கடங்கள் புறப்பட்டன. சிவாச்சாரியார்கள் புனிதநீரை சுமந்து சென்று ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் ராஜகோபுரத்தில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. குடமுழுக்கின்போது கருடபகவான் கலசத்தின் மேல் சுற்றி சுற்றி வந்து வட்டமிட்டது. இதனை மெய்மறந்து பார்த்த பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.தொடர்ந்து இரவில் மயில் வாகனத்தில் சாமி வீதிஉலா நடந்தது.

குடமுழுக்கு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூரியநாராயணன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் அய்யம்மாள், தக்கார் உமாமகேஸ்வரி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழில் ஒலித்த மந்திரம்

குடமுழுக்கின்போது யாகசாலை பூஜைகளில் மந்திரங்கள் தமிழில் ஓதவேண்டும் என்றும், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றும்போதும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சில அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன. அதன்படி யாகசாலை பூஜைகளின்போது சமஸ்கிருத வேதமந்திரங்களுடன் தமிழில் திருமுறை பாடல்களும் ஒலித்தன. அதேபோல் ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டபோது சிவாச்சாரியார்கள் சமஸ்கிருதத்தில் வேதமந்திரங்களை முழங்கினர். அதேபோல் தமிழ் ஓதுவார்களைக் கொண்டு தமிழில் திருமுறை பாடல்கள் பாடப்பட்டன. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டன.


Next Story