நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் அடுத்தடுத்து சாலை மறியல்


நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் அடுத்தடுத்து சாலை மறியல்
x

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தின் முன்பு நெல் கொள்முதல் செய்ய கோரி விவசாயிகள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தின் முன்பு நெல் கொள்முதல் செய்ய கோரி விவசாயிகள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

2-வது இடத்தில் திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் வெகுவாக அதிகரித்து உள்ளது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அதிகப்படியான நெல் மூட்டைகள் வருவதால் விவசாயிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

ஆன்லைன் பதிவு இந்த மாதம் இறுதி வரை பூர்த்தி ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் சாலை மறியல்

மேலும் விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகள் ஆன்லைன் பதிவில் பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தற்போது நிறுத்தம் செய்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சாகுபடி விபரங்கள் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் சான்று மற்றும் வேளாண் அலுவலரின் சான்றுகளை இணைத்து திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

கேட்டை பூட்டி நிற்க வைத்தனர்

இந்த நிலையில் நேற்று காலை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்திற்கு நெல்கொள்முதல் செய்வதற்காக பதிவு செய்ய பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தனர். அலுவலகத்திற்குள் விவசாயிகள் வரமுடியாத படி கேட்டை பூட்டி வெளியே நிற்க வைத்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் திடீரென காலை சுமார் 9.30 மணியளவில் அலுவலகம் முன்பு போளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து வந்தனர்.

இருப்பினும் அலுவலர்கள் விவசாயிகளை மீண்டும் அலுவலகத்தின் வெளியிலேயே காத்திருக்க வைத்தனர். இதனால் மீண்டும் ஆவேசம் அடைந்த விவசாயிகள் 2-வது முறையாக சுமார் 11 மணியளவில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக நின்றது.

வாக்குவாதம்

சாலையில் சென்ற மக்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வந்து பூட்டியிருந்த அலுவலக கேட்டை ஆவேசமாக தள்ளி திறந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது விவசாயிகள் கூறுகையில், கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை வாங்க வேண்டும் என்றனர்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இந்த மாதம் 30-ம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை பெறுவதற்கான ஆன்லைன் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் விவசாயிகளை தவிர்த்து வியாபாரிகள் யாரேனும் உள்ளார்களா? என கள ஆய்வு செய்த பின்னர் நெல்லை கொள்முதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். கள ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர் ''என்றனர்.



Next Story