சம்பா பருவத்திற்கு பின் உளுந்து சாகுபடிக்கு மானியத்தில் விதைகள்


சம்பா பருவத்திற்கு பின் உளுந்து சாகுபடிக்கு மானியத்தில் விதைகள்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு பின் உளுந்து சாகுபடிக்கு விதைகள் மானியத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

சம்பா நெல் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 831 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உளுந்து பயிர் தனி பயிராகவும், மானாவாரி பயிராகவும், சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நெல் சாகுபடிக்கு பின்னர் தரிசில் உளுந்து சாகுபடியும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்வதனால் கிடைக்கும் நன்மைகளான, மாற்றுப்பயிர் சாகுபடி செய்யப்படுவதால் நீர் பயன்பாடு குறைகிறது. நீர்வளம் சேமிக்கப்படுகிறது. 60-75 நாட்களுக்குள் உளுந்து பயிர் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

மானியத்தில் விதைகள்

உளுந்து போன்ற பயறுவகை பயிர்களின் வேர் முடிச்சில் தழைச்சத்து சேகரிக்கப்படுவதனாலும், அதன் தழைகளை வயலில் மடக்கி உழுவதினாலும் மண்வளம் மேம்படுகிறது. பயிர் சுழற்சியின் காரணமாக பூச்சிநோய் தாக்குதல் குறைகிறது. உளுந்து குறுகியகால பயிர் என்பதனால், சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயலில் மீதமிருக்கும் உரச்சத்துக்களை பயன்படுத்திக்கொள்கிறது. இதனால் உரச்செலவு குறைகிறது.

புரதச்சத்து மிக்க உணவின் தேவை அதிகமாக இருப்பதனால், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல சந்தை விலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இத்தகைய பலன்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதனால் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நெல் நடவுக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு உளுந்து விதைகள் ஒரு ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் வழங்கப்படுகிறது.

உழவன் செயலி

இத்திட்டமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான தரமான சான்று பெற்று உளுந்து விதை ரகங்களான வம்பன் 8, வம்பன் 10 ஆகிய ரகங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் போதுமான இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கிட தயார் நிலையில் உள்ளது. எனவே, விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி செய்து பயன்பெறுமாறு கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


Next Story