கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் உளுந்து சாகுபடிக்கு மானியத்தில் விதைகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள் வழங்கப்படுவதாக கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் மற்றும் ரபி பருவத்தில் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் உளுந்து பயிர் சாகுபடி செய்திடுங்கள்.
தற்போது பரவலாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி, ஆடிப் பட்டத்தில் குறைந்த வயதுடைய (65-75 நாள்) உளுந்து வகையை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
இதற்கு தேவையான உளுந்து விதைகள் 147.89 மெட்ரிக் டன், நுண்ணூட்டம் 209 மெட்ரிக்டன் மற்றும் திரவ உயிர் உரம் 26,096 லிட்டர் 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிடும் வகையில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
8 கிலோ விதைக்கு மானியம்
நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.400 வீதம் 8 கிலோ விதைக்கு மானியம் வழங்கப்படுகிறது. பயறு வகைகளை பயிரிடுவதன் மூலம் மண்வளம் மேம்படுவதுடன், சுற்றுசூழலை பாதுகாப்பதிலும் பயறு வகை சாகுபடி இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மேலும் பயறுவகை செடிகளின் தழைகள் மண்ணில் மக்கி உரமாகி மண்வளத்தை மேம்படுத்துகிறது. எனவே விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் உளுந்து மற்றும் பயிர் வகைகளை அதிக அளவில் பயிரிட்டு இரட்டிப்பு வருமானம் பெற்றிடலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.