குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம்


குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம்
x

குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் கூறி உள்ளார்.

மயிலாடுதுறை

குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறுவை தொகுப்பு திட்டம்

2022-ம் ஆண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டம் சீர்காழி வட்டாரத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சீர்காழி வட்டார விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ரசாயன உரங்கள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.

நெல் விதைகள் மற்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கான விதைகள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. ரசாயன உரங்கள் 6,500 ஏக்கருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. மற்றும் 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

மானியம்

மேலும் விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ17.50 வீதம் வழங்கப்பட உள்ளது. அதேபோல சிறுதானிய பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களும் வழங்கப்படும்.

பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 75 ஏக்கரில் உளுந்து பயிரிடும் பொது விவசாயிகளுக்கு விதைகள், இலைவழி உரச்சத்து மற்றும் அறுவடை ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ.1,250-ம், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.1,570-ம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கலாம்

குறுவை பருவத்தில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி மற்றும் நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்காக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.5,600 வரையிலும் வழங்கப்பட உள்ளது.

ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story