ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் தீவனப்புல் வளர்க்க மானியம்


ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் தீவனப்புல் வளர்க்க மானியம்
x
தினத்தந்தி 11 Dec 2022 7:00 PM GMT (Updated: 11 Dec 2022 7:01 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியம் வழங்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியம் வழங்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீவனப்புல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 2022-23 நிதி ஆண்டில் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு (900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியினர்) கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பு மற்றும் புல்கரணைகள் வழங்க ரூ.1 கோடி செலவில் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என மானியம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 65 வயது வரையிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிகளுக்கு விதை தொகுப்பு, புல்கரணைகளுடன் அவற்றை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானிய தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இணையதளம்

ஆதிதிராவிடர்கள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், திட்ட அறிக்கை உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story