ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம்


ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம்
x

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்

ஆண்டு முழுவதும் வருமானம்

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டமானது விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங்களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்தவும், பயிர் சாகுபடி முறைகளில் அதிகபட்ச உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணை கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறு சுழற்சி செய்யவும், காலநிலை மற்றும் சமூகத்திற்கு ஏற்றவாறு மாடு, கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்கவும் வழி செய்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மானாவாரி பகுதி வளர்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்தில் தலா 100 எக்டேரில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக வேளாண்மைத்துறை மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு எக்டேர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும்.

பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை

மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி மற்றும் கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புப்பெட்டி போன்றவற்றை திட்ட வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும். இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.

அரசு வழிகாட்டுதலின்படி உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளை மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். உழவன் செயலியில் பதிவு செய்ய அப்பகுதி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக தேர்வாகும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக 20 சதவீத சிறப்பு மானியத்துடன் எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story