தேனீ வளர்ப்புக்கு பயிற்சியுடன் கூடிய மானியம்
தேனீ வளர்ப்புக்கு பயிற்சியுடன் கூடிய மானியம்
போடிப்பட்டி
மடத்துக்குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் தேனீ வளர்ப்புக்கு பயிற்சியுடன் கூடிய மானியம் வழங்கப்படுகிறது.
சிறந்த தொழில்
இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறக்கூடிய தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை தரக்கூடியதாக உள்ளது.தற்போது தேன் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால் தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீ வளர்ப்பை சிறிய அளவில் தொடங்குவது நல்லது.அதன் மூலம் புதிய பயிற்சியும் அனுபவம் பெற்ற பின்னர் சாதகமான சூழ்நிலை இருக்கும் இடங்களில் வணிக ரீதியில் தேனீ வளர்ப்பைத் தொடங்கலாம். தேனீக்களில் பல ரகங்கள் உள்ள நிலையில் அடுக்குத் தேனீக்களை மட்டுமே பெட்டியில் வைத்து வளர்க்க முடியும்.சமவெளி ரகத்தை சமவெளிகளிலும் மலை ரகத்தை மலைப்பகுதியிலும் வளர்க்க வேண்டும்.தேன் பண்ணை அமைக்க தேர்வு செய்யும் இடம் தேனீக்களுக்கும் தேனீ வளர்ப்போருக்கும் ஏற்ற இடமாக அமைய வேண்டும்.தேனீ கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாக காணப்படுகிறதோ அந்த இடங்கள் பொதுவாக தேனீ வளர்ப்பதற்கு ஏற்றவை.தேனீ வளர்ப்பில் வெற்றி பெறவும் அதிக தேன் மகசூல் பெறவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் 2 கிமீ சுற்றளவுக்கு தேனீக்களுக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரக்கூடிய மரம், செடி, கொடிகள் இருக்க வேண்டும்.அதுபோல தேனீக்களுக்கு தூய்மையான தண்ணீர் அவசியமாகும்.தேனீ வளர்க்கும் இடத்துக்கு அருகே கிணறு, ஓடை, சுனை, வாய்க்கால் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் நல்லது.அதிக வெப்பம், அதிகவேகமான காற்று மற்றும் கனமழை தேனீ வளர்ப்பைப் பாதிக்கும்.எனவே தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவநிலை நிலவும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.பயிர் பாதுகாப்பு மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் தேனீ வளர்ப்பில் சிக்கல்கள் ஏற்படும்.மேலும் தேனீ பெட்டிகளை நிழலில் வைக்க வேண்டும்.தேனீ பெட்டிகளுக்கு இடையே 6 அடி இடைவெளி கொடுக்கலாம்.அடுத்தடுத்து நெருக்கமாக வைப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் பணித் தேனீகள் கூடு மாறி செல்வது தவிர்க்கப்படும்.தேனீ பெட்டிகளை சம தளமாக உள்ள பகுதியில் வைக்க வேண்டும்.எறும்புப் புற்று அல்லது எறும்புக் கூடு உள்ள இடங்களில் வைக்கக் கூடாது.தேனீ பெட்டிகளை தாங்கி நிற்கும் கால்களை நீர் ஊற்றிய கிண்ணங்களில் வைக்கலாம்.வேப்ப எண்ணெய் கலந்த கிரீஸை கால்களில் தடவி வைக்கலாம்.இதனால் எறும்புத் தொல்லையில் இருந்து தேனீக்களை பாதுகாக்கலாம்.
அரசு மானியம்
தேனீ வளர்ப்பு முறையை விவசாயிகள் சிறப்பாக மேற்கொள்வதன் மூலம் தங்கள் நிலங்களில் தேனீக்களின் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் கூடுதல் மகசூல் பெறுவதுடன் தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் பெற முடியும். மேலும் விரிவாக தேனீ வளர்ப்பு முறையை நேரடியாக அறிந்து கொள்ள கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாதமும் 6 ம் தேதி தேனீ வளர்ப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் தோட்டக்கலைத் துறை மூலம் 40 சதவீதம் மானியத்தில் தேனீ பெட்டிகளை வழங்குகிறது.2022-23ம் நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை அதிகரித்தல் இனத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேனீக்களுடன் தேனீ பெட்டிகளும் தேன் பிழியும் கருவி, புகைவிடும் கருவி ஆகியவற்றை 40சதவீதம் மானியத்தில் வழங்குகிறது. மடத்துக்குளம் வட்டாரத்துக்கு 50 தேனீ பெட்டிகள் தேனீக்களுடன் வழங்கப்பட உள்ளது. குறைவான தேனீ பெட்டிகளே இருப்பதால் முன் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேனீ பெட்டிகள் வழங்கப்படும்.கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மடத்துக்குளம் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கும் ஆதி திராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.சென்ற நிதியாண்டில் பாப்பான்குளம் கிராமத்தில் விவசாயி தண்டபாணிக்கு 40 சதவீதம் மானியத்தில் 10 தேனி பெட்டிகள் வழங்கப்பட்டு தற்போது தேன் எடுத்து உழவர் சந்தை மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகிறார்.மேலும் தேனீக்கள் வளர்க்க விரும்புவர்களுக்கு தோட்டத்திலேயே இலவசமாக பயிற்சியும் அளித்து வருகிறார். தோட்டக்கலை துறை மூலம் மானியத்தில் வழங்கப்படும் தேனீ பெட்டிகள் வர விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
---
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்ட போது எடுத்த படம்.