துவரை சாகுபடியில் நாற்று நடவு செய்ய மானியம்


துவரை சாகுபடியில் நாற்று நடவு செய்ய மானியம்
x

துவரை சாகுபடியில் நாற்று நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

கரூர்

துவரை நாற்று

கரூர் மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள் சுமார் 12 ஆயிரம் எக்ேடர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் துவரை 4300 எக்ேடர் சாகுபடி செய்யப்படுவதாலும், இதில் உயர் தொழில்நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் மகசூல் பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக துவரை பயிரானது கிருஷ்ணராயபுரம், தாந்தோணி மற்றும் கடவூர் வட்டாரங்களில் பெருமளவில் சாதாரண முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. துவரை பயிரில் மகசூல் அதிகரிக்கும் நோக்கில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், உயர்தொழில்நுட்பங்களை கடைபிடித்திட 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்ேடருக்கு ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் 400 எக்ேடருக்கு மானியம் அரசால் வழங்கப்பட உள்ளது. மகசூல் அதிகரிக்க சான்று பெற்ற உயர்விளைச்சல் ரகங்களை பயிரிடுதல், நாற்றங்கால்களில் துவரை நாற்றுகளை நடவு செய்து சரியான எண்ணிக்கையில் துவரை பயிரினை பராமரித்தல், இயற்கை உரங்கள், திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை ஆகிய இடுபொருட்கள் வினியோகம் மற்றும் 2 சதவீத டி.ஏ.பி. கரைசல் பூக்கும் பருவத்தில் இருமுறை தெளித்தல் ஆகிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து துவரை சாகுபடி செய்திட மானியம் வழங்கப்பட உள்ளது.

ரூ.25 ஆயிரம் கூடுதல்

துவரை விதைகளை நேரடியாக விதைப்பு செய்வதற்கு பதிலாக நாற்றங்கால்களில் கோ-8 ரக துவரை விதைகளை 5-க்கு 3 அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிலத்தின் மண், மணல் மற்றும் தொழுஉரம் ஆகியவற்றை சமவிகிதத்தில் கலந்து நிரப்பி 1 செ.மீ ஆழத்தில் 2 விதைகள் வீதம் விதைக்க வேண்டும். விதைகளை விதைப்பதற்கு முன் திரவ ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் மற்றும் சூடோமோனாஸ் கலந்து விதை நேர்த்தி செய்திட வேண்டும்.

25-30 நாட்கள் வயதுள்ள நாற்றுக்களை நேரடியாக வயலில் மானாவாரியாகவோ, இறவையாகவோ 5-க்கு 3 அடி இடைவெளியில் நடவேண்டும். துவரையினை நடவு செய்வதால் பருவமழை தாமதமாகும்போது பயிரினை உரிய காலத்தில் சாகுபடி செய்யப்படுவதொடு பயிரின் வறட்சியினை தாங்கும் திறன் அதிகரிக்கிறது. இதன்மூலம் எக்டருக்கு கூடுதலாக 30 சதவீதம் மகசூல் கிடைக்கப் பெறுவதுடன் விவசாயிகள் வருமானம் ரூ.25 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்கும்.

முன்னுரிமை

துவரை உற்பத்தி பெருக்கு திட்டமானது கரூர், க.பரமத்தியில் தலா 5 எக்ேடர், தாந்தோணியில் 30 எக்ேடர், குளித்தலையில் 60 எக்டர், தோகைமலையில் 65 எக்ேடர், கடவூரில் 90 எக்ேடர் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் 145 எக்ேடர் வீதம் செயல்படுத்த இலக்குகள் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

எனவே, துவரையினை நாற்றங்கால் மூலம் நடவு செய்து உற்பத்தியினை பெருக்க உயர்தர தொழில்நுட்பங்களை கடைபிடித்திட விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆதார் எண், வங்கி கணக்கு புத்தக நகல், கம்ப்யூட்டர் சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களை அளித்து இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story