காளாண் வளர்ப்பு கூடாரம் அமைக்க மானியம்


காளாண் வளர்ப்பு கூடாரம் அமைக்க மானியம்
x

காளாண் வளர்ப்பு கூடாரம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் முன்னோடி திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிகளை செயல்படுத்திட 20 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு வசதியாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பெரும்பான்மை திட்டங்கள் கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கீழமாத்தூர், அல்லிநகரம், இரூர், காரை, நக்கசேலம், நாரணமங்கலம், எளம்பலூர், எசனை, வடக்குமாதவி, மலையாளப்பட்டி, அன்னமங்கலம், வி.களத்தூர், பிரம்மதேசம், சிறுமத்தூர், அகரம்சீகூர், எழுமூர், கீழப்புலியூர், கிழுமத்தூர், ஓலைப்பாடி, பரவாய் ஆகிய கிராம ஊராட்சிகளில் காளாண் குடில் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி அல்லது தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் 600 சதுரஅடி அளவுள்ள காளாண் வளர்ப்பு கூடாரம் அமைக்க அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story