சோயா பீன்ஸ் விதைப்புக்கு மானியம்


சோயா பீன்ஸ் விதைப்புக்கு மானியம்
x

சோயா பீன்ஸ் விதைப்புக்கு மானியம் வழங்கப்படும் என அதிகாரி கூறினார்.

தஞ்சாவூர்

சோயா பீன்ஸ் விதைப்புக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண் உதவி இயக்குனர் ராணி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ் விதைப்பு செய்திட ஒரு எக்டேருக்கு 65 கிலோ விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பா நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தற்சமயம் பெய்துள்ள மழையினை பயன்படுத்தி சோயா பீன்ஸ் விதைகளை வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து பெற்று உடனடியாக விதைப்பு பணி மேற்கொள்ள விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சோயா பீன்ஸ் விதைப்பு செய்யும் விவசாயிகளின் விவரங்கள் கோயம்புத்தூர் சக்தி சோயா கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அறுவடை முடிவுற்றதும் கம்பெனியே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

காற்றோட்டம்

சோயா சாகுபடி செய்வதன் மூலம் உழவனின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழுக்களின் எண்ணிக்கை மண்ணில் அதிகரிக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.

மண்ணில் நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. எனவே விவசாயிகள் சோயா பயிரிடுவதன் நன்மைகளை உணர்ந்து வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து விதைகளை பெற்று உடனடியாக விதைப்பு செய்து அதன் விவரத்தினை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story