சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்


சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
x

சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் தீபா தெரிவித்தார்.

திருப்பத்தூர்


சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் தீபா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நுண்ணீர் பாசன திட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 20,805 எக்டர் பரப்பளவில் மா, வாழை, தென்னை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை பயிர் செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தோட்டக்கலை துறை மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசன திட்டம் மூலம் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்க திட்டம் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், வீரிய ரக காய்கறி (கத்தரி, மிளகாய், தக்காளி) ஒரு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணை கூடப்பட்டு மற்றும் தகரகுப்பத்தில் இருந்து வழங்கப்படுகிறது.

குமிழ்கள் மலர் (சம்பங்கி) ஒரு எக்டருக்கு ரூ.60 ஆயிரம் மானியமும், இயற்கை முறையில் காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.3 ஆயிரம் மானியத்தில் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

பண்ணைக்குட்டை

நீர் வளங்களை உருவாக்குதல் திட்டத்தின் மூலம் பண்ணைக்குட்டை அமைப்பதற்கு அரசு மானியமாக பண்ணைக்குட்டை ஒன்றிற்கு ரூ.75 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பூச்சி, ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.1200 மானியத்தில் உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் வழங்கப்படும்.

தேனீ வளர்ப்பு திட்டத்தின்கீழ் ஒரு தேன் கூட்டிற்கு ரூ.1600 மானியமாகவும், தேன் பிழியும் எந்திரம் வாங்க ரூ.8 ஆயிரம் மானியமாகமும் வழங்கப்படும். ஒருங்கிணைந்த அறுவடைக்கு பின்சார் மேலாண்மை திட்டத்தின்கீழ் விவசாயிகள் அறுவடை செய்த பின்பு விளைப்பொருட்களை சேமிப்பு மற்றும் தரம் பிரிக்க சிப்பம் கட்டும் அறை (600 சதுர அடி) அமைக்க 50 சதவீதம் பின்னேற்பு மானியத்தில் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டங்களுக்களில் உழவன் செயலி, www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story