விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்


விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
x

வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தமிழக அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மதிப்பு கூட்டும் எந்திர சேவை மையங்கள் மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்தாண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 2 மதிப்பு கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் விளை பொருட்களை தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.

தரம் பிரிக்கும் எந்திரம்

வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவற்றில் விவசாய குழுக்கள் தங்களுக்கு எந்தவகை எந்திரங்கள், எவ்வளவு எண்கள் தேவையோ அவற்றினை மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கி மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை) பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மானியம்

மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயக் குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மானிய விலையில் அமைத்திடவும் மற்றும் கூடுதல் விவரங்களை அறிந்திட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல்துறை, தச்சூர் கூட்ரோடு, கள்ளக்குறிச்சி-606202 என்ற முகவரியிலும், 04151-291125என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, 45/72 பெரியார் தெரு, என்.ஜி.ஜி.ஓ. நகர், திருக்கோவிலூர்-605757 என்ற முகவரி அல்லது 04153-253333 என்ற தொலைபேசி எண் மூலமாக கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


Next Story