மிதவைக்கூண்டுகளில் கடல் மீன்கள் வளர்க்க மீனவர்களுக்கு மானியம்கலெக்டர் தகவல்


மிதவைக்கூண்டுகளில் கடல் மீன்கள் வளர்க்க மீனவர்களுக்கு மானியம்கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2023 6:45 PM GMT (Updated: 8 Aug 2023 6:46 PM GMT)

மிதவைக்கூண்டுகளில் கடல் மீன்கள் வளர்த்தெடுக்க மீனவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்


இதுதொடர்பாக கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மிதவைக்கூண்டுகளில் கடல் மீன்

பிரதம மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் கடல் மீனவர்கள் பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்டத்திற்கு 5 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது, மிதவைக்கூண்டுகளில் கடல் மீன்கள் வளர்த்தெடுத்திடும் திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மிதவைக் கூண்டுகளில் கடல் மீன்களை வளர்த்தெடுத்திட ஒரு அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகையான ரூ.5 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் (ரூ.2 லட்சம்) மானியமும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத (ரூ.3 லட்சம்) மானியமும் அரசால் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற மீன்பிடி தொழில் அல்லது அதனை சார்ந்த தொழிலை மேற்கொள்பவராகவும், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராகவும், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்ப படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையதளமான www.fisheries.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் விண்ணப்ப படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள்

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், கடலூர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story