பழங்குடியின மக்களுக்கு தரமற்ற வீடுகள்
முதுவாக்குடியில் பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் தரமற்றதாக உள்ளது என்று கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன் காட்சிக்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதுவாக்குடியில் பழங்குடியின மக்களுக்காக 2019-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பசுமை வீடுகள் இன்றுவரை கட்டி முடிக்கப்படவில்லை. அரசு விதித்த விதிகளின் அடிப்படையில் எந்த வீடும் முழுமையாக கட்டப்படவில்லை. தகுதியற்ற கட்டுமான பொருட்களை கொண்டு சில வீடுகள் முழுமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அரசு நிர்ணயித்த ஆயுட்காலம் அளவுக்கு அந்த வீடுகள் நிலைத்திருக்க வாய்ப்பில்லை. வீடுகளை திறப்பதற்கு முன்பு அவற்றின் உறுதித்தன்மையை சோதனை செய்ய வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.