சுசீந்திரம் போலீஸ் நிலைய ஏட்டு பணியிடை நீக்கம்


சுசீந்திரம் போலீஸ் நிலைய ஏட்டு பணியிடை நீக்கம்
x

பத்திரம் தவறியதற்கான சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சுசீந்திரம் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

பத்திரம் தவறியதற்கான சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சுசீந்திரம் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு

தமிழகத்தில் நில மோசடியை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக நிலப்பத்திரம் தவறிவிட்டது என்பது தொடர்பான சம்பவங்களில் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து, தவறியதற்கான சான்றிதழ் (மிஸ்சிங் சான்றிதழ்) முறைப்படி விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்னரே வினியோகம் செய்ய வேண்டும்.

ஆனால் குமரி மாவட்டத்தில் புரோக்கர்கள் உதவியுடன் சில போலீஸ் நிலையங்களில் பத்திரங்கள் தவறி விட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு தகவல் வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்படி போலீஸ் நிலையங்களில் இருந்து வினியோகம் செய்யப்பட்ட சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி நடந்தது. அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் அல்லது சப்-இன்ஸ்பெக்டர்கள் கையெழுத்துக்கள் உண்மைதானா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

சுசீந்திரம் போலீஸ் நிலையம்

இதில் சமீபத்தில் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் கையெழுத்துடன் வழங்கப்பட்ட மிஸ்சிங் சான்றிதழில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

விசாரணையில் இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல் அவரது கையெழுத்து போலியாக போடப்பட்டு பத்திரங்கள் மிஸ்சிங் சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமியை வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது, தான் அந்த கையெழுத்து போடவில்லை என்று அவர் எழுதி கொடுத்தார்.

ஏட்டு பணியிடை நீக்கம்

தொடர்ந்து நடந்த விசாரணையில் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு கோபால் என்பவர் மூலம் போலி கையெழுத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிய வந்தது.

இந்தநிலையில் ஏட்டு கோபாலை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மேல் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கோபாலுக்கு சொந்த ஊர் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார்.


Next Story