சுதர்சன மகா யாகம்
மாம்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் சுதர்சன மகா யாகம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் மாம்பட்டு கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சுதர்சன மகா யாகம் நடந்தது. இதையொட்டி முத்து மாரியம்மன், மகா காளியம்மன், விநாயகர், முருகர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், குங்குமம், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் ஆகியவை மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு அலங்காரம் செய்து யாக குண்டம் அமைத்து, சக்தி இல.லட்சுமணன் பல்வேறு மூலிகை கொண்டு சுதர்சன யாகம் நடத்தினார். தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து கோவிலை வலம் வந்து, ஊஞ்சலில் வைத்து தாலாட்டு நடந்தது.
நள்ளிரவு 12 மணி அளவில் காளியம்மனுக்கு பல்வேறு பழவகைகள் வைத்து பூரண கும்பம் படையல் போடப்பட்டது.
விழாவில் துலாபாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், ஈரோடு, சேலம், வேலூர், குடியாத்தம், ஆற்காடு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.