கோகுலின் சகோதரர் மீது திடீர் தாக்குதல்
கோகுலின் சகோதரர் மீது திடீர் தாக்குதல்
கோவை
கோவை கோர்ட்டு அருகே ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட கோகுலின் சகோதரர் மீது திடீரென தாக்குதல் நடைபெற்றது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வெட்டிக் கொலை
கோவை கோவில் பாளையத்தை அடுத்த கொண்டையம் பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 22). ரவுடியான இவர் கடந்த 13-ந் தேதி ஒரு வழக்கில் கோவை கோர்ட்டில் கையெழுத்திட்டுவிட்டு கோர்ட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை, பின் தொடர்ந்து வந்த கும்பல் கோகுலை சுற்றிவளைத்து ஓட ஓட விரட்டி கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர்.
சகோதரர் மீது தாக்குதல்
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட கோகுலின் சகோதரர் பிரதீப் (20). இவர் நேற்று தனது வீட்டின் தெருவில் நின்று கொண்டு அங்கு நடந்து சென்றவர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்களிடம் எனது அண்ணனே செத்து விட்டான். நீங்கள் எல்லாம் எதற்காக உயிரோடு இருக்கிறீர்கள். நீங்களும் சாகுங்கள் என்று கூறி உள்ளார். இந்த நிலையில் அந்த வழியாக வாலிபர்கள் சிலரிடம் பிரதீப் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், தங்கள் பிரதீப்பை திடீரென சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
கைது
இதுகுறித்து கோவில் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரதீப்பை வாலிபர்களிடம் இருந்து மீட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, பிரதீப், வாலிபர்களை கத்தியை காட்டி மிரட்டியதும், அதனால் அவர்கள் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரதீப்பை கைது செய்தனர். தொடர்ந்து பிரதீப்பை தாக்கியவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----------------