திருச்சி மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் வாரச்சந்தை நடத்த திடீர் தடை; மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
திருச்சி மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் வாரச்சந்தை நடத்த திடீர் தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சி மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் வாரச்சந்தை நடத்த திடீர் தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
வாரச்சந்தைகள்
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதும், பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகளும் நடந்து வருகிறது. குறிப்பாக, தில்லைநகர் 80 அடி ரோடு, உறையூர் ஹவுசிங் யூனிட், லிங்கம் நகர், ஸ்ரீரங்கம், பாத்திமாநகர், ராமலிங்கநகர் விரிவாக்கம், வயர்லெஸ் ரோடு, உடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகள் நடந்து வருகிறது.
இங்கு மாநகரை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்த பொருட்களை நேரடியாக கொண்டு வந்து வியாபாரிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தனர். இது அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வசதியாக இருந்ததால் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
திடீர் தடை
அதேநேரம், இந்த வாரச்சந்தைகளால் அந்தப்பகுதிகளில் நிரந்தரமாக கடை அமைத்துள்ள உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக்கூறி, வாரச்சந்தைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் தற்போது மாநகர பகுதிகளில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் வாரச்சந்தைகள், தினசரி மாலை நேர சந்தைகள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது. தில்லை நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வாரச்சந்தை போட சில வியாபாரிகள் வந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். அப்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் பா.ஜ.க.வினர் வியாபாரிகளுக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகரில் கடை அமைத்துள்ளவர்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் வாரச்சந்தை வியாபாரிகள் எதுவும் செலுத்துவதில்லை. இதுபோன்ற வாரச்சந்தைகள் சாலைகளில் நடத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் அதிகமாகி மாநகராட்சிக்கு கூடுதல் பணிச்சுமையும், நேர விரயமும் ஏற்படுகிறது.
எனவே புதிய பகுதிகள் மற்றும் சாலைகளில் உரிய அனுமதியின்றி நடத்தப்படும் வாரச்சந்தை உள்ளிட்ட கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாநகராட்சியிடம் உரிய தொகையை செலுத்தி அனுமதி பெற்று வாரச்சந்தையை நடத்திக்கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே இருக்கும் சந்தைகளுக்கு அருகில் வாரச்சந்தைகளை நடத்த மாநகராட்சி அனுமதிக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.