குழந்தை திடீர் சாவு
உளுந்தூர்பேட்டை அருகே குழந்தை திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 27). தொழிலாளி. இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு ஜானகி (4), கீர்த்தனா (2) ஆகிய பெண் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆதிலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மோனிகா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் குழந்தை மோனிகாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மோனிகா பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்து 22 நாளிலேயே இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.