ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்
தர்மபுரி மாவட்டம் இண்டமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த 2 வார்டு உறுப்பினர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அங்கு கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், எங்கள் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் கடந்த ஒரு ஆண்டாக நடைபெறவில்லை. நாங்கள் பதிவேடுகளில் கையெழுத்து போடவில்லை. ஆனால் எங்கள் கையெழுத்தை வேறு யாரோ போட்டுள்ளனர். இந்த கையெழுத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதேபோல் அனைத்து பதிவேடுகளையும், ஆய்வு செய்ய வேண்டும். ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.