குற்றாலம் மெயின் அருவியில் திடீரென விழுந்த உடும்பு; பெண்கள் அலறியடித்து ஓட்டம்


குற்றாலம் மெயின் அருவியில் திடீரென விழுந்த உடும்பு; பெண்கள் அலறியடித்து ஓட்டம்
x

குற்றாலம் மெயின் அருவியில் திடீரென 5 அடி நீள உடும்பு விழுந்ததால் பெண்கள் அலறியடித்து ஓடினர்.

தென்காசி

குற்றாலம் மெயின் அருவியில் திடீரென 5 அடி நீள உடும்பு விழுந்ததால் பெண்கள் அலறியடித்து ஓடினர்.

உடும்பு விழுந்தது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுகிறது. இதனால் தினமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். தற்போது சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஆண்களும், பெண்களும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள பாதுகாப்பு வளைவின் மீது திடீரென சுமார் 5 அடி நீளம் உள்ள உடும்பு ஒன்று விழுந்தது. இதனைப்பார்த்த பெண்கள் அலறியடித்து அருவியில் இருந்து வெளியேறி ஓடினர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சென்று பார்த்தபோது அந்த உடும்பு அருவியின் முன்புறம் உள்ள தடாகத்தில் விழுந்தது தெரியவந்தது.

பரபரப்பு

இதுகுறித்து தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரமேஷ், போக்குவரத்து அலுவலர் சுந்தரம், ஏட்டு கணேசன் மற்றும் தீயணைப்பு படையினர், சிவா மற்றும் வனத்துறையினரும் இணைந்து அந்த உடும்பினை பிடிக்க முயற்சி செய்தனர். உடும்பு தண்ணீரில் இருந்து வெளியே வருவதும், உள்ளே செல்வதுமாக இருந்தது. இதனால் அதனை பிடிக்க முடியவில்லை.

பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த உடும்பு பிடிபட்டது. அதனை வனத்துறையினர் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் மெயின் அருவி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story