காலி கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தில் திடீர் 'தீ'


காலி கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தில் திடீர் தீ
x

நாமக்கல் அருகே காலி கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

நாமக்கல்

திடீர் 'தீ'

ஈரோட்டில் இருந்து நாமக்கல்லில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திற்கு 50 காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தை ஈரோடு சடையம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகுமார் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்தநிலையில் அந்த சரக்கு வாகனம் நல்லிபாளையம் அடுத்த எர்ணாபுரம் பாலம் அருகே வந்தபோது சரக்கு வாகனத்தின் என்ஜினில் இருந்து புகை வெளியேறி உள்ளது. இதை கண்ட டிரைவர் கார்த்திக்குமார் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார். பின்னர் வாகனத்தில் திடீரென தீப்பிடித்து மளமளவென பரவி கேபின் முழுவதும் எரியத் தொடங்கியது.

சரக்கு வாகனம் சேதம்

அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் சரக்கு வாகனத்தின் முன் பகுதி முழுவதும் தீயில் கருகி சேதமானது.

மேலும் சிலிண்டர்கள் அனைத்தும் காலியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காலி கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story