குப்பை கிடங்கில் திடீர் தீ
கோத்தகிரி குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 3-வது நாளாக தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 3-வது நாளாக தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தீ விபத்து
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-குன்னூர் சாலையில் கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா (குப்பைகள் மறு சுழற்சி மையம் மற்றும் கிடங்கு) உள்ளது. 4½ ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம், வாழை இலைகளை அரைக்கும் எந்திரம், பிளாஸ்டிக் குப்பைகளை சிறு துகள்களாக அரைக்கும் எந்திரம், மக்காத குப்பைகளை எரிக்கும் எந்திரம் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் இருக்கிறது.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 4 டன் குப்பைகள், லாரிகள் மூலம் வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு குப்பைகளை தரம் பிரித்து 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி இரவு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு இருந்த குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அருகே உள்ள குப்பைகளுக்கும் தீ பரவி பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அணைக்கும் பணி
இருப்பினும், காற்றின் காரணமாக மீண்டும் குப்பைகள் பற்றி எரிய தொடங்கின. இதையடுத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனால் தீயை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீ முற்றிலுமாக அணைக்கப்படாததால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
இந்த வளம் மீட்பு பூங்காவை ஒட்டி உள்ள கன்னிகா தேவி காலனி, கிருஷ்ணாபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் புகையின் காரணமாக சிரமம் அடைந்து வருகின்றனர். சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மேற்பார்வையில் குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் பணி 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.