பச்சிளம் குழந்தை திடீர் சாவு
பொன்னமராவதி அருகே பச்சிளம் குழந்தை திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூளாங்குறிச்சி மேட்டு தெருவில் வசித்து வருபவர் இளையராஜா. இவருடைய மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு இத்திரிஸ் (வயது 1) என்ற குழந்தை இருந்தது. இளையராஜா தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். சவுந்தர்யா கடந்த 20 நாட்களாக பொன்னமராவதி இந்திரா நகரில் உள்ள தனது தாயார் பாண்டிச்செல்வி வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையான இத்திரிஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, குழந்தையை சிகிச்சைக்காக சவுந்தர்யா நேற்று காலை 9 மணியளவில் பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் உடல் உடல் கூறு ஆய்வுக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.