வளர்ச்சி பணிகளை தாட்கோ மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை தாட்கோ மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
x

நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

அதிகாரி ஆய்வு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பதற்கான வீடுகளை கட்டுவதற்காக தொடங்கப்பட்டது. பின்னர் ஆதிதிராவிடர்களின் வாழ்க்கை தரம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி நேற்று பயனாளிகள் தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக பரமத்திவேலூரில் வேதநாயகம் என்பவர் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் ரூ.5 லட்சம் கடனுதவி பெற்று மின்சாதன பொருட்கள் விற்பனை செய்து வருவதையும், வெங்கமேடு பெரியார் காலனியில் ரமேஷ் என்பவர் தையல் தொழில் செய்து வருவதையும் தாட்கோ மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.

கலந்துரையாடல்

இதனைத் தொடர்ந்து, நாமக்கல்- துறையூர் சாலை கொசவம்பட்டியில் தாட்கோ மூலம் கடன் உதவி பெற்று தையலகம் நடத்தி வரும் பயனாளியுடனும், குட்டை மேலத்தெருவில் தாட்கோ மூலம் கடன் உதவி பெற்று டிஜிட்டல் பிளக்ஸ் அச்சகம் நடத்தி வரும் பயனாளியுடனும் தாட்கோ மேலாண்மை இயக்குனர் கலந்துரையாடினார். ஆய்வுக்கு வந்த தாட்கோ மேலாண்மை இயக்குனர் திடீரென நாமக்கல்லில் சாலையோர டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.

இந்த ஆய்வின் போது தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜகுரு, உதவி மேலாளர் வளர்மதி, தாட்கோ செயற்பொறியாளர் நடராஜன், உதவி செயற்பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story