வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு


வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு
x

ஜேடர்பாளையம் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

வெல்லம் ஆலைகளில் ஆய்வு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு துறை) அருண் மற்றும் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் 2 நாட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மொத்தம் 21 வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது வெல்ல ஆலைகளில் வெல்லபாகு தயாரிக்கும் இடம், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சுத்தமாக உள்ளனரா? அஸ்கா சர்க்கரை இருப்பு, வேதிப்பொருள்கள் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதில் அஸ்கா சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு கலப்படம் செய்யப்பட்டு நாட்டுச் சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு தரச் சட்டம் 2006-ன் படி உணவு பாதுகாப்பு துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வேதிப்பொருட்கள் பறிமுதல்

மேலும் 38 ஆயிரத்து 310 கிலோ வெல்லம், நாட்டுச்சர்க்கரை மற்றும் 3 ஆயிரத்து 725 கிலோ அஸ்கா சர்க்கரை மற்றும் வேதிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தணிக்கையின் போது 13 வெல்ல ஆலைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சம்பந்தப்பட்ட வெல்ல ஆலைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.


Next Story