சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் திடீா் இயந்திர கோளாறு; 104 போ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினா்


சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் திடீா் இயந்திர கோளாறு; 104 போ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினா்
x

சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்லும் விமானத்தில் திடீா் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து பயணிகள் விமான நிலையத்தில் பல மணி நேரம் தவித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை:

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 9.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 98 பயணிகள் 6 விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர் இருந்தனர்.

விமானம் ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் இழுவை வாகனம் மூலமாக இழுத்துவரப்பட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனா்.

அதன்பின் 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர். ஆனால் 4 மணிக்கும் புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதன் பின்பு பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதோடு விமானம் இன்று பகல் 12 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சிங்கப்பூர் செல்ல வேண்டிய 98 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரமாக தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story