தே.மு.தி.க.வினர் திடீர் மறியல்


தே.மு.தி.க.வினர் திடீர் மறியல்
x

தே.மு.தி.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கேட்டு, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மைக்செட் ஒலி அளவை குறைக்க வேண்டும். சாலையோரம் நடப்பட்டிருந்த தே.மு.தி.க. கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று மாநகர போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தே.மு.தி.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலை கைவிட்டு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க அமைப்புசாரா செயலாளர் திருப்பதி, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் அலங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.மாதவன் கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதில், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து மகளிருக்கும் கலைஞர் உரிமைத் தொகையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், காவிரியில் கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கான உரிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், விளை நிலங்களை அழித்து வரும் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story