திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் த.மு.மு.க.வினர் திடீர் மறியல்


திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் த.மு.மு.க.வினர் திடீர் மறியல்
x
தினத்தந்தி 7 Oct 2022 1:15 AM IST (Updated: 7 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் த.மு.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

திண்டுக்கல்

போலீசாரை கண்டித்து மறியல்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்த மத்திய அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து மதுரையில் த.மு.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


இதில் கலந்து கொள்வதற்காக கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து த.மு.மு.க.வினர், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விடாமல் அவர்களை திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரம் அடைந்த த.மு.மு.க. மற்றும் மனிதநேய கட்சியினர் திண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு சுங்கச்சாவடி மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளபட்டி பிரிவு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி முன்பு தங்களது வாகனங்களை நிறுத்தினர்.


பின்னர் அவர்கள், தங்கள் கட்சி கொடியுடன் திரண்டு வந்து சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷமிட்டப்படி இருந்தனர். இதனால் மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


அணிவகுத்து நின்ற வாகனங்கள்


சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மறியலால் மதுரை நோக்கி சென்ற வாகனங்களும், மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த வாகனங்களும் சாலையின் இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.


மறியலின்போது, திண்டுக்கல் நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் திணறியது. பின்னர் அங்கிருந்த பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தினர். பஸ்களில் இருந்த பயணிகள் குறித்த நேரத்தில் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதற்கிடையே திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற வாகனங்கள் 4 வழிச்சாலையில் காமலாபுரம் பிரிவு, நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி, பள்ளப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டது. மதுரையில் இருந்து வந்த வாகனங்கள் பாண்டியராஜபுரம் பிரிவு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.


பேச்சுவார்த்தை


சாலை மறியல் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினரை மதுரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு மதுரை நோக்கி அவர்கள் புறப்பட்டு சென்றனர்.


சின்னாளப்பட்டி


முன்னதாக திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டி அருகே வெள்ளோடு காபிகடை பிரிவு என்னுமிடத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற த.மு.மு.க.வினர், மனிதநேய மக்கள் கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கள்ளிமந்தையத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி வைத்து இருப்பதாகவும், அதனை விடுவிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.


தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்களை விடுவிப்பதாக கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story