விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியல்
x

கந்தர்வகோட்டை அருகே பேனரை திருடியவர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

சாலை மறியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாளைெயாட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள மாட்டாங்கால் பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் வாழ்த்து பேனரை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் மாட்டாங்கால் பஸ் நிறுத்தத்தில் கூடினார்கள். பின்னர் பேனரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை கைது செய்ய வலியுறுத்தி பட்டுக்கோட்டை-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேனரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பட்டுக்கோட்டை-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story