போஸ்டர், பேனர்கள் கிழித்ததை கண்டித்து பா.ஜ.க.வினர் திடீர் போராட்டம்
வேலூரில் போஸ்டர், பேனர்கள் கிழித்ததை கண்டித்து பா.ஜ.க.வினர் திடீர் போராட்டம் நடத்தினர்.
தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் வேலூரை அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இதனையொட்டி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பா.ஜ.க. சார்பில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் கூட்டம் முடிவதற்கு முன்பே வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் பேனர், போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பா.ஜ.க.வினர் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் பேனர், போஸ்டர்களை கிழித்தவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பா.ஜ.க.வினர், அனுமதி பெற்று வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்ய வேண்டும். மீண்டும் அவற்றை அந்த இடத்தில் ஒட்ட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று கூறினார்கள். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு கிழிந்த பேனர்கள் மற்றும் புதிதாக போஸ்டர் அதே இடத்தில் ஒட்டப்பட்டன. இதையடுத்து பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.