புதுக்கோட்டையில் திடீர் மழை
புதுக்கோட்டையில் திடீர் மழை பெய்தது.
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, பழச்சாறு உள்ளிட்டவைகளை பருகி உடல் சூட்டை தணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது லேசாக வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டது. மாலை 3.30 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 4 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரம் தூறி நின்றது. பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதல் அளித்தது.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. அதனை தொடர்ந்து திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்யத்தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் திருவரங்குளம் வட்டார பகுதிகளான பூவரசகுடி, கைக்குறிச்சி, மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, வம்பன் நால்ரோடு, வல்லத்திராகோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.