வால்பாறையில் திடீர் மழை


வால்பாறையில் திடீர் மழை
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:17:22+05:30)

வால்பாறையில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திடீர் மழை

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் நின்று போனது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது லேசான மழை பெய்தது. அதனை தொடர்ந்து கடந்த 2 மாதமாக மழை பெய்யவில்லை. இதனால் வால்பாறை பகுதியில் கடும் வெயில் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. குளிர்ந்த காலநிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதேபோல நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

பலத்த மழை பெய்தததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். திடீரென பெய்த மழையால் கடைவீதிகளுக்கு வந்த பலரும் மழையில் நனைந்தபடி சென்றனர். மதியம் 1.30 மணி வரை பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

வால்பாறையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்ததால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது. தற்போது மழைபெய்துள்ளதால் நீர்நிலைக்கு வரும் வாய்க்காலில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.


Next Story