பா.ம.க.வினர் திடீர் சாலை மறியல்


பா.ம.க.வினர் திடீர் சாலை மறியல்
x

திருவண்ணாமலை, ஆரணியில் பா.ம.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை, ஆரணியில் பா.ம.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அன்புமணி ராமதாஸ் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனி, நகர செயலாளர்கள் கார்த்திகேயன், உதயராகவன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், கணபதி, முருகன், பட்டாளி ஊடக பேரவை செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் அதே பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி

ஆரணி பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது. அப்போது சில தொண்டர்கள் பஸ் முன்பு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அ.கருணாகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் அ.பிச்சாண்டி, மாவட்ட துணை செயலாளர் து.வடிவேல், மாவட்ட அமைப்பு தலைவர் அ.க.ராஜேந்திரன், நகர செயலாளர்கள் சு.ரவிச்சந்திரன், ந.சதீஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட துணை தலைவர் மு.மெய்யழகன், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஞானாம்மாள் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சுதாகர், சேவூர் பாபு, சிவா, பேராசிரியர் கு.சிவா, கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story