சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென கிளம்பிய புகை
சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் திடீரென புகை வந்தது. இதனால் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.
வேலூர்,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று மதியம் 1.25 மணியளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், ஜோலார்பேட்டை வழியாக மங்களூர் நோக்கி சென்றது. 3.35 மணியளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்ற இந்த ரெயில் 3.38 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது.
லத்தேரி ரெயில் நிலையம் அருகே உள்ள எல்.சி.55 கேட் பகுதியில் சென்றபோது ரெயிலின் பொதுப்பெட்டியின் சக்கரத்தின் அருகில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த கேட் கீப்பர் உடனடியாக லத்தேரி ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நடு வழியில் நிறுத்தம்
அதன்பேரில் சுமார் 4 மணியளவில் லத்தேரி ரெயில் நிலையம் யார்டுவில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு வெளியே இறங்கி வந்தனர். அதன் பிறகு ரெயில்வே ஊழியர்கள் சோதனை செய்ததில் வண்டியில் பிரேக்கில் பழுது ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று அதனை சரி செய்தனர். அதன் பிறகு 4.17 மணிக்கு ரெயில் புறப்பட்டு மங்களூர் நோக்கி சென்றது. ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.