கிண்டி தனியார் வங்கி அலுவலக சர்வர் அறையில் திடீர் புகை மூட்டம்
கிண்டி தனியார் வங்கி அலுவலக சர்வர் அறையில் புகை மூட்டத்தை தீயணைப்பு வீரர்கள், அரை மணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் தனியார் வங்கி அலுவலகம் உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள சர்வர் அறையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேற தொடங்கியது. இதனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, அலுவலகத்தில் இருந்து அலறிஅடித்து வெளியே ஓடிவந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணிநேரம் போராடி புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகப்படியான வெப்பம் காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அலுவலகம் முழுவதும் புகை மூட்டம் பரவியதால் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.